புதன், 25 ஜூலை, 2018

வெறித்து பார்ப்பதற்கென்றே





வெறித்து பார்ப்பதற்கென்றே


 எனக்கென ஒரு சாளரம்
பூட்டியே கிடக்கிறது
மங்கலா நிழல்கள்
நடமாடியபடி ஒரு
வாசல்படி இருக்கிறது
என்னறையின்    இருளை கிழித்தபடி
கூரையின் ஓட்டையில்
ஊடுருவி பாய்கிறது
ஒரு தனித்த நட்சத்திர ஒளி
எப்போதும் இந்த
கிளையில் வந்தமர்கிறது
சிறகுகள் உதிர்கிற
ஒரு அயல்தேச பறவை


வெறித்து பார்ப்பதற்கென்றே
வளர்ந்து அசைகிறது
அந்த கீழ்வீட்டு மரக்கிளை
பொழுது சாயும்
நேரத்தில் வந்து போகிறது
அந்த கரிச்சான் குருவி

வெறித்து பார்ப்பதற்கு 
மட்டுமே கூடிய வகையில் 
இந்த தலையில் அத்தனை
தூக்க முடியாத பளு

விடாது பெய்து கொண்டேயிருக்கிறது 
ஒரு அடர் மழை
சூரியன் உதிக்கிறது
நிலவு வருகிறது
ஓரிரு வின்மீன்கள்
தூரத்தொலைவுகளில்

வெறித்து பார்ப்பதற்கு மட்டுமே 
வசதியாய் இருக்கிறது
பல வருடமாய் என் 
பின்னோக்கியே நிற்கும்  மனம்

நர்மி
26.7.2018

ஒரிசா பயணக்குறிப்புகள் - நாள் - 02

சௌர சமயத்தின் முழுமுதற் கடவுளான சூரியனிற்கு பாரதம் முழுவதும் பல கோவில்கள் வேத காலம் தொட்டு அமைக்கப்பட்டிருக்கின்றன.அவ்வாறு அமைக்கப்பட்ட சூரிய கோவில்களில் எஞ்சியிருக்கும் தென்னாசியாவின் முக்கியத்துவம் வாய்ந்த கோவில்களில் ஒன்று ஒரிசா மாநிலத்தில் உள்ள கோனார்க் சூரியக்கோவில்.

UNESCO வினால் உலகப்புராதன சின்னமாக 1984 இல் அறிவிக்கப்பட்டு,மத்தியரசின் சுற்றுலாத்துறையின் கீழ் பாதுகாக்கப்படும் கோனார்க் சூரியக்கோவில் இந்தியாவிலேயே அதிக சுற்றுலா பயணிகளும் ,யாத்திரிகர்களும்,கலைஞர்களும், பார்வையிடும் தலங்களில் முக்கியமானதாக உள்ளது.ஒரிசாவின் தங்க முக்கோணங்களில் ஒன்றான கோனார்க் நோக்கி 01.07.2018 அன்று வாடகை கார் ஒன்றை அமர்த்திக்கொண்டு எங்கள் பயணம் தொடங்கியது. பூரியில் இருந்து சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் குறைவான கோனார்க் நோக்கிய பயணத்தில் இரு வழிகளிலும் பச்சைப்பசேலென விரிந்து கிடக்கும் பாதுகாக்கப்பட்ட வனங்கள்,குளிர்மையான குளங்கள்,பரந்த புற்தரைகள், அவற்றில் கூட்டமாக மேய்ந்துக்கொண்டிருக்கும் மந்தைக்கூட்டங்கள்,தூரத்துக்கொரு வீடுகள்,நீண்ட வீதிகளில் தென்படும் ஓரிரு தேநீர் கடைகள், ஒரிசாவிற்கென தனித்துவமான கோவில் கோபுரங்கள், இடையிடையே பௌத்த ,சமண கோவில்கள்,பரந்த கடற்கரைகளென இது வரை ஒரிசா ஒரு வரண்ட மாநிலம் என்ற மனப்பதிவை இப்படி வழி நெடுக நீங்கள் பார்க்கும் காட்சிகள் உங்களிடம் இருந்து நீக்கிவிடும்.

கிழக்கு கங்கை வம்சத்தை சேர்ந்த 1ம் நரசிம்ம தேவனினால் 13ம் நூற்றாண்டளவில் (கி.பி.1236 _ 1264) சுமார் 12 வருடம் இப்பேரரசின் வருமானத்தை திரட்டி இந்த சூரிய கோவில் கட்டப்பட்டிருக்கிறது. ரவீந்ரநாத் தாகூர் தன் கவிதையில் சொல்வதைப்போல ,

" இங்கே , கல்லின் மொழி மனிதனின் மொழியை தாண்டிச் செல்கிறது "

அப்படியொரு பிரமாண்டமான கலிங்கத்தின் கலை பொக்கிசமாக தான் உண்மையில் கோனார்க் காணப்படுகிறது.

ஒடிசா மாநிலத்தில் கொனார்க் எனும் இடத்தில் வங்ககடலோரம் ,சௌர மதத்தின் பிரதான கடவுளான சூரியன் 24 தேர் சக்கரங்கள் கொண்ட 07 குதிரைகளால் இணைக்கப்பட்ட பிரமாண்ட தேரில் வருவது போல கோனார்க் சூரிய கோவிலை அமைத்திருக்கிறார்கள்.

வங்க கடலோரம் அமைக்கப்பட்டிருக்கின்ற கோனார்க் சூரிய கோவில் புவியியல் ரீதியான இடிபாடுகள் காரணமாக அதிகளவில் இதன் சிற்பங்கள்,கோபுரங்கள் பாதிப்படைந்திருக்கின்றன.1837 இற்கு முன்னர் வரை இந்த கோவிலின் பிரதான சூரியனின் சிலை இங்கு தான் இருந்துள்ளது.1837 இல் ஏற்பட்ட ஒரு பிரமாண்டமான உடைவில் இக்கோவிலின் கோபுரங்கள்,சிற்பங்கள் இடிந்து விழுந்துள்ளன.தொடர்ச்சியான இயற்கை சேதங்களான மழை,இடி,மின்னல்,கடற்தாக்கத்தினால் குறிப்பாக 1837 ஏற்பட்ட பிரமாண்ட உடைவினால் சூரியக்கடவுளின் பிரதான சிலை பூரி ஜகந்நாதர் கோவிலில் இப்போது மாற்றி வைத்து பூஜை செய்யப்படுகிறது.பூரி கோவில் சென்றிருந்த போது சூரியனின் சிலையை நாங்கள் பார்த்திருந்தோம் பின்னர்.

ஐரோப்பிய மாலுமிகளால் ப்ளாக் பகோடா (கறுப்பு கோவில்) எனப்பட்ட இந்த கோவிலை பார்த்தீர்களானால் இது சிவப்பு மணற்பாறையாலும் , கருப்பு கிரானைட் கற்களையும் கொண்டு கண்டியிருக்கிறார்கள்.இந்த கோயிலுக்குள்ளே தனியே தூண்கள் காணப்படவில்லை.ஏனென்றால் ஒவ்வொரு கற்களுக்கும் இடையில் இரும்பு தூண்களை இணைத்து கட்டியிருப்பதாக சொல்கிறார்கள்.17 ம் நூற்றாண்டிளவில் இந்த கோவிலில் இருந்து சரிந்து விழுந்த பகுதியின் மேல் 52 டன் காந்தம் இருந்ததாக சொல்கிறார்கள்.அந்த காந்தம் தான் இக்கோவில் தூண்கள் இல்லாமல் நிற்க காரணமாக இருந்திருக்கிறது.இதற்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள கோனார்க் சூரிய கோவில் அருங்காட்சியம் இடிப்பாடுகளில் சிதைந்த சிற்பங்கள்,தூண்களின் உடைவுகளை பாதுகாத்து வருகின்றது.இந்த கோவிலின் கோபுரம் மட்டும் அப்படியே இருந்திருக்குமானால் லிங்கராஜா மந்தீர் கோவில் கோபுரத்தைவிட கோனார் தான் உயரமான கோவில் கோபுரத்தை ஒரிசாவில் கொண்டிருக்கும்.

24 சக்கரங்களை கொண்ட 7 குதிரைகள் பூட்டப்பட்ட தேரில் சூரியக்கோவில் ஒரு காலக்கடிகாரம் போல அமைக்ககப்பட்டிருக்கிறது.10 அடி விட்டத்தில் அமைக்கப்பட்ட 24 தேர் சக்கரங்கள் ஒரு நாளின் 24 மணித்தியாளத்தையும்,7 சக்கர கட்டைகள் வாரத்தின் 7 நாட்களையும் குறிப்பதாக அமைத்துள்ளார்கள்.ஒவ்வொரு நான்கு மாதத்திலும் ஒவ்வொரு பிரிவின் வழியாக சூரிய ஒளி சூரியனின் சிலை மீது படும் வகையில் அமைத்திருக்கின்றனர்.

பிரதான சூரிய கோவிலுக்கு முன்பாக நாதமந்திர்.இரண்டு பக்கமும் இரு மண்டபங்கள்,பின் பகுதியில் ஒரு கோவில்,என காணப்படுகிறது.கோனார்க் அருகில் பாழடைந்த நிலையில் உள்ள கோவில் சூரிய பகவானின் மனைவி மாயாதேவியினுடையது.

இங்குள்ள சிற்பங்களை எடுத்துக்கொண்டால் மிருகங்கள்,நடன மாதுக்கள்,போர்க்காட்சிகள்,தாய்மை,காதல் ,காமம்,ஆன்மீகமென அனைத்து விதமான சிலைகளும் நுட்பமாக அமைக்கப்பட்டுள்ளன.ஆனால் இங்கு பிரதான கோவில் காமசாஸ்த்திர சிலைகளை பிரமாண்டமாக செதுக்கியுள்ளனர்.மத்திய பிரதேசத்தில் இருக்கும் கஜுராஹோவில் இருப்பது போன்ற அதே பாணியில் அமைந்த பாலியல் சிற்பங்களை இந்த கோவிலில் காணலாம்.பிரதான கருவறையை சுற்றி பார்க்கும் போது எல்லா சிற்பங்களும் தனியே 12 ம் நூற்றாண்டை மட்டும் சேர்ந்திருக்காது என தோன்றுகிறது.முற்றிலும் மாறுபட்ட சிற்பங்களை இங்கு காணமுடிகிறது.முழுமையாக முடிவடையாத சிற்பங்களை காணலாம்.தனியே ஆண்,பெண் தவிர்ந்த மிருகங்கள்,பல பெண்களுடன் புணர்தல்,பல ஆண்களுடன் புணர்தல்,பாலினம் கடரந்த காமசிற்பங்கள் காணப்படுகின்றன.ஒரு கோவிலில் இப்படி பல ஆண்,பெண் கூடி மகிழும் பாலியல் சிற்பங்கள் அமைக்கப்பட காரணம்,சூரிய பகவான் சிருஸ்டி கடவுள் எனவே தான் இங்கு அதிகளவில் காமசிலைகள் என்கின்றனர்.எல்லாவற்றையும் தாண்டி கோவில்களுக்குள் ஒரு அரசியல் இருக்கிறது.அதிலும் ஒரிசாவில் சௌரம்,இந்து சமயம்,சமணம்,பௌத்தம் என இன்றும் சேதமடைந்த நிலையில் பேணப்படும் வழிப்பாட்டு தலங்களுக்குள் இருக்கும் அரசியல் தனியே தேடப்படவேண்டியவை.சமணமும்,பௌத்தமும் லௌகீக வாழ்வை பிரதானபடுத்தாதவை.எனவே கோவிலை மையப்படுத்திய மதபிரச்சார வடிவமாக கூட அந்த காமசாஸ்த்திர சிலைகள் இருக்கலாம்.



இங்கு சுற்றுலா பயணிகளை மையப்படுத்திய வணிகம் நன்றாகவே நடக்கிறது.முடிந்தளவு தனியே ஒரு நாள் கோனார்க் சூரிய கோவிலுக்கு வருவது தான் நல்லது.இங்கு ஒரு பெக்கேஜ் மூலம் ஒரே நாளில் மொத்த பூரியையும் காட்ட பார்ப்பார்கள்.முடிந்தளவு அவற்றை தவிர்த்து உள்ளூர் மக்கள் பயணிக்கும் பொது வண்டிகளில் போகும் போது ஒரிசா மக்களின் வாழ்வியலை ,கூடவே அவர்களின் மொழி,உடை,நடை , பாவனையை நெருக்கமாக பார்க்கின்ற வாய்ப்பு கிடைக்கும்.கூடவே கோனார்க் சூரிய கோவிலை ,அதன் சுற்று சூழலை அனுபவித்து பார்க்க முடியும் என நினைக்கிறேன்.

நர்மி
படங்கள் : Subs Raj
01.07.2018




















ஒரிசா பயணக்குறிப்புகள் - நாள் - 01



கருமையான இருள் நகரமெல்லாம் படியத்தொடங்கும் இரவொன்றில், எப்பொழுதும் நான் இந்த கல்கத்தாவில் இருந்து புறப்படுகிறேன்.இங்கு ஐந்து மணிக்கெல்லாம் இருளத்தொடங்கிவிடுகிறது.அதன் பிறகு கருமையான இருள் நகரமெல்லாம் பரவும்.பத்து பதினொரு மணி வரை இங்குள்ள சந்யா பஜார்கள் இயங்கி கொண்டும்மக்கள் நடமாட்டமுமாய் இருக்கும்.ஆனால் மெல்ல மெல்ல இருளின் மௌனம் கவியத்தொடங்கிவிடும்.

இரவைக்குறித்து பேசிக்கொண்டேயிருக்கிறார்கள்எழுதிக்கொண்டேயிருக்கிறார்கள்.இன்னும் இன்னும் தேடிக்கொண்டேயிருக்கிறார்கள்.இரவு எல்லாக்காலங்களிலும் மறுவாசிப்பு செய்யப்பட்டுக்கொண்டேயிருக்கிறதுயுகம் யுகமாக கவிஞர்களும், இசைஞானிகளும்,ஓவியர்களும் இந்த இரவின் முன் ஒரு கட்டத்தில் ஸ்த்தம்பித்து விடுகிறார்கள்.இரவுகள் மட்டும் தான் உங்களையே உங்களுக்கு அடையாளம் காட்டக்கூடியவை.இந்த இரவுகள் மட்டும் தான் நீங்கள் உங்களுக்குள்ளேயே பயணம் செய்கின்றீர்கள் என்ற உணர்வை உங்களுக்கு தரும்.

இப்படிப்பட்ட இரம்மியமான இரவை பார்த்து வியந்த மாபெரும் ஓவியக்கலைஞன் வின்சன்ட் வான்கோ இரவு குறித்த தன் மனப்பதிவை இவ்வாறு விவரித்திருப்பார்..

"I often think that the night is more alive and more richly coloured than the day." - Vincent Van Gogh


இவ்வாறான ஒரு இரவினை அழைத்துக்கொண்டு சியல்தா புகையிரத நிலையத்தில் இருந்து சியல்தா - பூரி துரொந்தோ எக்ஸ்பிரஸின் ஊடாக ஒரிசாவை நோக்கி 29.6.2018 அன்று இரவு 8.மணியளவில் எங்கள் பயணம் தொடங்கியது.

இரவு புகையிரத பயணங்களை கவனித்திருக்கிறீர்களா..? அதில் எல்லாவற்றையும் தாண்டிய ஒரு பிணைப்பு இருக்கும்.இன்று எத்தனையோ அதிவேக போக்குவரத்து வசதிகள் வந்துவிட்டன.எவ்வளவோ சொகுசான பயண போக்குவரத்து முறைகள் கொட்டிக்கிடக்கின்றன.ஆனால் புகையிரத பயணங்கள் ஏற்படுத்துகின்ற அனுபவங்கள்,அதற்கு இருக்கும் ஒரு வசீகரம் தனித்துவமானது.புகையிரதங்கள் ஏற்படுத்திய தாக்கம் மனித போக்குவரத்து சாதனங்களில் முக்கியமானது.இந்த புகையிரதங்கள் குறித்தும் ,புகையிரத பயண அனுபவங்கள் குறித்தும் அதிகளவாக பேசப்பட்டிருக்கின்றனஇன்றளவும் பேசப்பட்டுகொண்டிருக்கின்றன.புகையிரத அனுபவங்களை கதை கருவாக கொண்டு பிரசித்திபெற்ற இலக்கியங்கள் படைக்கப்பட்டுள்ளன. 

அவற்றில்
- Mugby Junction by Charles Dickens(1866),
- La Bete Humaine by Emile zola(1890),
- The Railway Children by E Nesbit(1906),
- Stories of the railway by VL White church (1912),
- Bradshaw 's April 1910 Railway Guide (1968),
- The Great Railway Bazaar by Paul Theoroux(1975),
- The Railway station : A social History by Jeffrey Richards and John M Mackenzic(1986),
- Fire and steam : A new history of the railway Britain by Christian Wolmar (2007),
- Eleven minutes late : A train journey to the soul of Britain ; by Mathew Engel (2009),
போன்ற நூல்கள் அதிகளவில் பேசப்படுகின்றன.

உலகின் மாபெரும் இலக்கிய மேதைகளில் ஒருவரான டால்ஸ்டாய் பல கோடி சொத்துகளுக்கும்,நிலங்களுக்கும் அரண்மனைப்போன்ற வீடுகளுக்கும்,அன்பால் பணிவிடை செய்யக்கூடிய உறவுகளுக்கும் சொந்தக்காரராய் இருந்தார்.அப்படிப்பட்ட எழுத்துலகிலும்,நிஜ உலகிலும் கோடிஸ்வரனாய் இருந்த அவரின் இறுதி அத்தியாயம் எழுதப்பட்ட இடம் அஸ்தபோல் ரயில் நிலையத்தில் கோப்புகளும்,தூசிகளும் நிறைந்த ஒரு சின்னஞ்சிறிய அறை தான்.
இரவு எனக்கு எப்படி பிடிக்குமோ ,அவ்வளவு இந்த இரவு ரயில் பயணமும் பிடித்து போகிறது.

நான் இந்த நகரங்களை விட கிராமங்களை ரொம்பவே நேசிக்கிறேன்.மின்சாரம் வராத கிராமங்கள் இன்னும் கிராமங்களாகவே இருக்கின்றன.தூரத்தில் ஓரிரண்டு வீடுகள்,அதில் அகண்ட வானில் இருந்து விழுந்த நட்சத்திரம் போல மிதமான ஒளியில் ஓரிரு மின்விளக்குகள், பரந்து விரிந்த பொட்டல்காடுகள்,ஆங்காங்கே இருக்கும் நீர்நிலைகளின் ஊடு மிதந்து வரும் இந்த வட்ட நிலா,இருளில் மங்கலாக தெரியும் ஒரிசாவிற்கென்று தனித்துவமான கோவில் கோபுரங்கள்,கடந்து போகின்ற புகையிரத நிலையங்கள், புகையிரதங்களுக்காக காத்திருக்கும் ஆண்கள்,பெண்கள்,எப்போதும் இந்த ரயில் நிலையத்தில் , சுயநினைவிழந்த நிலையில் திரியும் மனிதர்கள்,ப்ளாட்பார இடுக்குகளில் படுத்துறங்கும் பிச்சைகாரர்கள்,பத்து மணி வரை அதிகமாக வந்து போகும் கரம் ச்சாய்காரர்கள் ,மூரி விற்பவர்கள்,கூடவே பயணம் செய்கின்ற வட நாட்டுக்காரர்கள் ,எப்பொழுதும் இந்த இரயில் நிலையத்தில் இயங்கிகொண்டே இருக்கின்ற பொட்டி கடைகள் என இரவு ஒரிசா இரயில் பயணம் தந்த பயணம் இரம்மியமான இரவின் நீட்சியோடு 29.6.2018 ,8 மணிக்கு ஆரம்பித்து 30.6.2018 அன்று காலை 4.30 மணியளவில் ஒரிசா புகையிரத நிலையத்தை வந்தடைந்தோம்.

29.6.2018